ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.............!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள். 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம் 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம். 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான் 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும் 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர் 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும் 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

வெற்றியின் ரகசியம் - எறும்பைப் போல் துறு துறுவென்று இரு. . . . . . . . . . !

நாம் எப்பொழுதும் நம்மைவிட புகழிலும் செல்வத்திலும் உயர் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, நாம் உயர்வதற்கு உண்டான வழிமுறைகளை கற்றுக் கொள்ள முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமான்ய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம், கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆசான் ஜிம் ரோன் (Motivational Guru Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் 'எறும்புகள் தத்துவம்' (Ants philosophy) என்று நான்கு செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல்கிறார்.

1. முயற்சியை விட்டு விடாதே: எறும்புகளைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. திகைத்து நின்று திரும்பிப் போவதுமில்லை. இதுபோல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, 'விடாதே, விடாதே, விட்டு விடாதே' என்று தாரக மந்திரமாகச் சொன்னார். 

2. துணிந்து செல்: எறும்புக்கும் வெட்டுக் கிளிக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான கதையை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன. கோடை காலம் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். நாம் நன்றாய் செல்வாக்காக இருக்கும் பொழுது, எதிர் காலத்தில் இடர் வராது என்று இறுமாப்பாய் இருக்காதே. எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லாவிட்டாலும், நல்ல நண்பர்கள் துன்பம் வரும் நேரத்தில் கைகொடுப்பார்கள்.

3. நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறு சுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்னை என்று எதுவுமில்லை. அதற்கு பிறர்க்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.

4. உன்னால் முடிந்ததெல்லாம் செய்: ஒவ்வொரு எறும்பும் எவ்வளவு தானியத்தை சேமித்து விட முடியும்? எறும்புகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதில்லை. மற்ற எறும்புகள் சமமாக உழைக்க வில்லையே! நான் மட்டும் ஏன் தொடர்ந்து உழைத்து சேகரிக்க வேண்டும் என்று சோம்பி இருப்பதில்லை. உழைப்பதற்கு கூலி குறைவென்றும் சலித்துக் கொள்வதுமில்லை. எனவே உன்னால் முடிந்ததெல்லாம் செய். நூற்றுக்கு நூறு சதம் நல்ல மனதுடன் உழைத்தால் மகிழ்ச்சியும், வெற்றியும் நிச்சயம்.
ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 20 மடங்கு கனமான பொருட்களை துக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்த முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப் பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.