திங்கள், 3 ஜூன், 2013

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள் :-

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. உதாரணமாக, ஓரு திரைப்படத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறார் டான்யல் ஹோலிஸ்டர். அது என்னவென்று பார்ப்போமே!

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.
* நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.
* மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.
* மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.
* உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
* அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள்.
* அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது.
* நியாயத்திற்காக போராடுங்கள்.
* வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள்.
* சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு.
* பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள்.
* உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள்.
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.
* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள்.
* சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில்.
* நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள்.
* அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.
* கடந்த கால வாழ்க்கையை மறந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
* எந்த ஓரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.
* உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திடுங்கள்
* பண்புடன் வாழுங்கள்.
* துயரமான நாள்களில் கடவுளை நம்புங்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவுமில்லை.

இலவசமாக கிடைத்தால் . . . . . . . . . . . . .!

அன்பு நண்பர்களே வணக்கம்........
இலவசமாக கிடைத்தால் . . . . . என்பது பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
நமக்கு எப்போதுமே இலவசங்கள் மீது ஒரு மோகம் உண்டு , அலாதியான அன்பு , ப்ரியம், பாசம், எல்லாமே உண்டு.
இன்றைய இளைஞர்கள் வேடிக்கையாக சொல்வார்கள் “ சும்மான்னா இவன் பெனாயில கூட குடிப்பான் ” னு . 

அரசாங்கங்கள் கூட மக்களை தன் வசமாக்க பலவிதமான இலவசங்களை தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது , இலவசங்கள் என்ற சொல்  சில சட்ட சிக்கலை தரும் வாய்ப்பு உள்ளதால் அதனை விலையில்லாப் பொருள்கள் எனும் பெயரில் வழங்குகிறது .
அதனைப் பெறுவதற்கு நாம், அடிதடிபட்டு முட்டி மோதி வாங்கி வருவோம் , அந்த பொருட்களுடன் தெருவில் பெருமிதத்தோடு நாம் நடந்து செல்வோம் நமது கண்களும் முகமும் சொல்லும் “ நாங்க யாரு.. வாங்கிடோம்ல ” .
இலவசம் பெறுவது என்றால், யார் யாருக்காவது பணம் தந்தாவது (?) அந்த இலவசங்களை பெற்று விடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளோம் . காரணம் இலவசங்களின் மீது நமக்கிருக்கும் மோகம் .
மிக மிகச் சில வருடங்களே உழைக்கக்கூடிய இலவசங்களுக்காக போராடும் நாம் , இலவசங்களை பெறுவதற்காக எல்லாவித அலுவலங்களுக்கும் விடாமல் பலபடிகள் ஏறி மனு கொடுக்கும் நாம், அந்த அலுவலகங்களில் உள்ள மேல் மட்ட , கீழ்மட்ட , அடிமட்ட பணியாளர்கள் என்று அனைவருக்கும் ஒரே மாதிரியான குழைவும் , கும்பிடும் கொஞ்சமும் மாறாமல் போட்டு களிக்கும் நாம், எதற்கு இது ? இது நமக்கு உபயோகப்படுமா ? இதைபோல இரண்டு மூன்று ஏற்கனவே நம்வீட்டில் சும்மா கிடக்கின்றதே இது எதற்கு என கொஞ்சமும் யோசிக்காமல் எப்படியாவது அவைகளை இலவசமாக பெற்றுவிடுவது என்ற நோக்கிலேயே முன்னேறும் நாம், இங்கிருந்து வெயிலில் காயும் நேரம், அங்கிருந்தால் இதனை விட சுகமாக இருந்து இதனிலும் அதிகமாக உழைத்து சம்பாதிக்கலாம் என தெரிந்தும் எங்கும் செல்லாமல் இலவசங்களுக்காக கால்கடுக்க வரிசையில் கொஞ்சமும் கலங்காமல் நிற்கும் நாம்,
எந்தவித உழைப்பையும் பெறாமல் , கால்கடுக்க நின்று பெறாமல், எந்த ஒரு நொடியும் இலவசங்களை தருவதை நிறுத்தாமல் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து தந்து கொண்டிருக்கும் , இன்னும் பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு தருவதற்கு வைத்திருக்கும் இலவசங்களை மதிக்காமல் , அதன் பெருமையை உணராமல் , அதனை இழிவுபடுத்தி , எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தி கொண்டிருக்கின்றோமே, அதனை உணர்ந்தோமா ? அதனை அழிப்பதையே நமது முழுநேர பணியாக கொண்டுள்ளோமே . . . .
அரசாங்கம் தருவது அந்த அந்த மாநிலத்திற்கு மட்டுமே !!??

இங்கே தருவதை அங்கே தரமாட்டார்கள் , தந்தால் அதையும் யாராவது ஸ்டே வாங்கி தடுத்து விடுவார்கள் !!??
ஆனால் இயற்கையின் இலவசங்கள் இந்த பேருலகிற்கே அல்லவா !!! இதை யாரும் ஸ்டே வாங்கி தடுக்க முடியாதே !!!
நீங்கள் இங்கே பெறுகின்ற அதே இலவசங்களை இந்த பூஉலகில் எங்கோ கடைசியில் உள்ள மனிதனும் பெறுகின்றானே !!!
மேலும் அந்த இலவசங்கள் எல்லாம் நம் கண் முன்னேயே சில நாட்களில் பழுதாகி அழிந்து விடும் ,
ஆனால் இயற்கையின் இலவசங்கள் இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம்  தலைமுறைகளுக்கு உரியதல்லவா !!!
ஏன் இதனை நாம் மதிக்கவில்லை தெரியுமா ? 

அது இலவசம் என்பதே நமக்கு புரியவில்லை , ஏதோ நமக்கு இயல்பாக கிடைக்கிறது என்றெண்ணிக் கொண்டுள்ளோம்.
உங்களுக்கு தெரியுமா ?

ஜப்பானில் நெடுஞ்சாலையில் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒன்றென காற்று நிலையங்கள் இருக்கின்றனவாம் , வாகனங்களுக்கு இல்லை, மனிதர்களுக்கு. நம் நாட்டு மதிப்பிற்கு முன்னூறு ரூபாய் 150 ml .
இந்த நிலை நம்நாட்டிற்கும் வர நீண்ட இடைவெளியில்லை .
இப்போதுதான் தண்ணீர் பாக்கெட்டிற்கு வந்துள்ளோம் .
ஒரு குடம் (சுமார் 18 litre) தண்ணீர் பிடிக்க சில இடங்களில் இரண்டு ரூபாய் வாங்குகிறார்கள் , ஆனால் அதே தண்ணீர் 200 ml இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை பஸ் நிலையங்களில் விற்கப்படுகிறது. 

காசுகளுக்காக காடுகளை அழித்தோம் , ரோட்டோர மரங்களை அழித்தோம். இந்த ஆண்டு மழை வருமா என பஞ்சாங்கத்தை புரட்டுகிறோம்.
காடுகளுக்கு உள்ளே இயற்கையை அழிக்காமல் செல்லும் அழகிய சாலைகள் அமைக்க முடியும், ஆனால் நாம் அமைக்கவில்லை .
நூறு ஆண்டுகளை கடந்த மரங்களையும் கூட நாம் விட்டு வைக்கவில்லை , பெயர்த்தெடுத்து வீசி விட்டோம், சாதனையாக.
பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டிய இதுபோன்ற மரங்களை அடிவேர் அறாமல் அப்படியே எடுத்து நகர்த்தி வைக்கின்றார்கள் பின் வரும் சந்ததிகள் காணவேண்டும் என்று மேலை நாடுகளில்.
மழை நீர் இல்லை அதனால் நதி நீர் இல்லை அதனால் கொஞ்ச நாளில் கடல் நீரும் காணாமல் போகும்.
நாம் எங்கே போவோம் நீருக்கு ?.

உப்புசப்பற்ற இலவசங்களுக்காக போராடுகிறோம் , உயிர்க் காக்கும் இலவசங்களை அழிக்கிறோம்.
இயற்கையின் இலவசங்கள் நம்மாலேயே அழிக்கபடுகின்றன.
ஆகாயத்தை கூறு போட்டுவிட்டோம் , வான் எல்லையினால்.
பூமியை கூறு போட்டோம் , புவி எல்லை பகுப்பினால்.
நீரை கூறு போட்டோம் , அணைக்கட்டு எனும் பெயரால்.
காற்றினை கூறு போட முடியாததினால் முடிந்தவரை மாசுபடுத்தினோம் .

தீயைக் கூறு போட்டால் அது நம்மை வறுத்து தந்துவிடும் என்பதனால் கொஞ்சம் தள்ளி நிற்கிறோம்.
ஆகாயம், பூமி , காற்று , நீர் எல்லாம் போனபின் . . . நாம் நெருப்போடுதான் விளையாட வேண்டிவரும். 

இப்போதே பூமி உஷ்ணமயமாதலால் வரண்டு வருவதாக புள்ளி விவரங்கள் கதறுகின்றன. நாம் எதனைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. இதெல்லாம் யாருக்கோ சொல்கிறார்கள் என்பதாக நினைத்துக் கொண்டு நாம் கிடைக்காத இலவசங்களுக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம் . 
தந்தையும் தாயும் இறந்து கொண்டிருப்பதை அறியாத குழந்தை , தாயினிடத்தில் பாலுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதை போல.
கொஞ்சம் நாம் யோசிப்போம் , 

நம் வாழ்வின் ஆதாரங்களை நாம் அழித்தபின் நாம் எதன் ஆதாரத் துணையுடன் இந்த பூமியில் வாழ்வோம்? நமது வழித்தோன்றல்களை எப்படி வாழ வைப்போம் ? அவர்களையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நமக்கென்ன உரிமை இருக்கின்றது ? நமக்கு முன்னால் இருந்தவர்கள் தனக்கு பின்வருபவர்களுக்கென வைத்துச் சென்றதை, நாமும் நமக்கு பின் வருபவர்களுக்கு விட்டு செல்ல வேண்டாமா ? அவர்களும் இந்த உலகில் பங்குள்ளவர்கள் தானே ? 
வெறும் காங்கிரீட் காடுகளாக உலகம் மாற்றப்படும் முன்னர் சிந்தியுங்கள் .
வளமோடு வாழுங்கள் . வாழும் நாளெல்லாம்..........

இந்த பதிவை பற்றி தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிரவும் ........

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள் :-

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..................!
வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள் :-

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.............